சனி, 4 மார்ச், 2023

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வரலாறு - 2

  • 1985 - 1986 இல் வணிகவியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
  • 1999 - 2000 இல் கணினி அறிவியலில் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
  • 2003 - 2004 இல்  வரலாறு, கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்புகள் தொடங்கப்பட்டன.
  • 2004 - 2005 இல் தமிழில் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது
  • 2005 - 2006 இல் பொருளியலில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் சுழற்சியில் தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. 
  • 2008 மார்ச் மாதத்தில் கல்லூரியின் வைரவிழா கொண்டாடப்பட்டது.
  • 2010 - 2011 இல் தமிழ் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
  • 2011 - 2012 இல் இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு தொடங்கப்பட்டது. BBE படிப்பு B.A. படிப்பாக மாற்றப்பட்டது.
  • 2012 - 2013 இல் ஆங்கிலம், தாவரவியல் ஆகியவற்றில் பட்டப் படிப்புகளும் விலங்கியலில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
  • இதே ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் படிப்புகள் தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் தொடங்கப்பட்டன.
  • இதே ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் வரலாறு, கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் தொடங்கப்பட்டன.
  • 2013 - 2014 இல் தாவரவியில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
  • இதே ஆண்டில் இயற்பியல், விலங்கியல், வணிகவியல், தாவரவியல் ஆகிய துறைகளில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்பட்டன.2014 - 2015 இல் ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பும் பொருளியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பும் தொடங்கப்பட்டன.
  • 2018 - 2019 இல் வணிக மேலாண்மையியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
  • ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்கள் & பணியாற்றுவோர் எண்ணிக்கை பின்வருமாறு:
             துறையின் பெயர்             ஒப்பளிக்கப்பட்டவை             பணியாற்றுவோர்
    1. தமிழ்                                  12                                                        4
    2. ஆங்கிலம்                        12                                                        4
    3. வரலாறு                           08                                                        4
    4. பொருளியல்                  07                                                         6
    5. வணிகவியல்                08                                                         6
    6. கணிதம்                           09                                                         7
    7. இயற்பியல்                    09                                                         5
    8. வேதியியல்                   08                                                         4
    9. விலங்கியல்                  09                                                         5
    10. கணினி அறிவியல்    08                                                         6
    11. தாவரவியல்                 10                                                         5
    12. வணிகமேலாண்மை 05                                                         0
    13. உடற்கல்வி                   01                                                          0
    14. நூலகர்                            01                                                           1  
               கூடுதல்                            107                                                        57
  • ஆசிரியரல்லா பணியிடங்கள்:    43                                          30
  • இதுவரை பணியாற்றியுள்ள கல்லூரி நிரந்தர முதல்வர்களின் எண்ணிக்கை: 29
  • மாணவர்களின் எண்ணிக்கை UG 3139      PG  498      M.Phil.  15    Ph.D.   Total  3652
      

திங்கள், 5 டிசம்பர், 2022

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை.

(ஆதாரம்: கல்லூரி மாணவர் கையேடு 2022-23)

    இக்கல்லூரியின் பவளவிழா நிறைவு ஆண்டில் 4.8.2022 முதல் நான் இக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். இக்கல்லூரியைப் பற்றிய சில செய்திகளை ஆவணமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள் அதாவது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகத் துவங்கப்பட்டது.
  • சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர் துரைசிங்கம் பெயரில் இக்கல்லூரியை அவரது மூத்த மகனார் சண்முகராஜா துவங்கினார்.
  • ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 
  • கௌரி விலாஸ் என்ற அரண்மனையின் ஒரு பகுதியில் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன.
  • 11.8.1947 அன்று அன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் தி.க.அவிநாசிலிங்கம் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
  • 216.65 ஏக்கர் நிலத்தைக் கல்லூரிக்கென தானமாக வழங்கினார் சண்முகராஜா. (தமிழகத்திலேயே அதிக நிலப்பரப்பு கொண்ட கல்லூரியாக இதுதான் இருக்கும் என்று கருதுகிறேன்)
  • இதுமட்டுமன்றி தான் வைத்திருந்த புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.
  • விளையாட்டுத் திடல், கிளப்ஹவுஸ் ஆகியவற்றையும் தானமாக வழங்கினார்.
  • 1950 இல் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தினால் இக்கல்லூரியின் செயல்பாட்டில் தேக்க நிலை ஏற்பட்டது.
  • ஆயினும் நல் உள்ளம் கொண்ட அப்பகுதி மக்களால் இந்நிலை மாற்றப்பட்டு 1951 முதல் கல்லூரி தொடர்ந்து செயல்படத் தொடங்கியது.
  • இண்டர்மீடியட் வகுப்புகளும் பி.ஏ. வகுப்புகளும் நடைபெற்றன.
  • 1952இல் தற்பொழுதைய கருங்கல்லாலான முதன்மைக் கட்டடத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது.
  • 1953 இல் மாணவர் விடுதி வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டது.
  • 1955-57 இல் கல் கட்டடத்தின் மேல் தளப்பகுதி பயன்பாட்டுக்கு வந்தது.
  • நடுவண் அரசு வழங்கிய ரூபாய் இரண்டு இலட்சத்தில் கட்டப்பட்ட கல் கட்டத்தின் மேலதளத்தில் மாணவர் விடுதி செயல்படத் தொடங்கியது.
  • 1960 இல் இளமறிவியலில் வேதியியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1962 இல் கல்லூரிக் கலையரங்கம் கட்டப்பட்டது.
  • 1963-64 இல் நூலகப் பகுதியும் இயற்கை அறிவியல் பகுதியும் கட்டி முடிக்கப்பட்டன.
  • 1964 இல் இளமறிவியலில் விங்கியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1966-67 இல் விலங்கியல் துறைக் கட்டடத்தில் மேலும் இரண்டு பெரிய அறைகள் கட்டப்பட்டன.
  • 1967-68 இல் கல்லூரி விடுதி மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • இக்கல்லூரியை நிறுவிய மன்னர் சண்முகராஜாவிற்குக் கல்லூரி முன் வாயிலில் 23.10.1969 இல்ஆளுயர சிலை அமைக்கப்பட்டது.
  • 1970 இல்இளங்கலையில் வரலாறு பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1971-72 இல் இளமறிவியலில் இயற்பியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் 1971-72 இல் மாணவர் பொது வசதிக் கூடமும் (Students Amenities Center) சிற்றுண்டியகமும் அமைக்கப்பட்டன.
  • கல்லூரியின் வெள்ளி விழா 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது.
  • விழாவின் தொடக்க நாளன்று மன்னர் துரைசிங்கத்திற்கு ஆளுயரச் சிலை கல்லூரி வளாகத்திற்குள் நிறுவப்பட்டது.
  • தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி (1976) கல்லூரியின் நிர்வாகம் 1.1.1977 முதல் தமிழக அரசின் நேரடிப் பராமரிப்பில் தற்காலிகமாக ஏற்கப்பட்டது.
  • 1.1.1977 முதல் 1.7.1981 வரை தமிழக அரசின் தனி அதிகாரியின் நிர்வாகத்தில் இருந்தது.
  • 1.7.1981 முதல் தமிழக அரசால் ஏற்கப்பட்டு அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது.
  • அரசு கல்லூரியாக மாறிய பிறகான கல்லூரியின் வளர்ச்சி வரலாறு அடுத்தப் பதிவில் இடம் பெறும்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

அணிந்துரை - ஆசிரியர் மோகன்

 

அணிந்துரை


மரபுக் கவிதைகள் எழுதுவதும் படிப்பதும் அருகி வரும் இக்காலக் கட்டத்தில்  சித்திரக் கவிதைகளைப் பற்றி கூறத்தேவையில்லை. சித்திரக் கவிதைகளைப்  படிப்பதற்கே தனித்திறன் தேவை. எழுதுவதற்கோ மீத்திறன் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய மீத்திறனைப் பெற்றவராக வெண்பா மோகன் திகழ்கிறார் என்பதன் வரலாற்று சாட்சியமாக இந்நூல் விளங்குகிறது.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்’

என்ற தமிழ்ப்பாட்டி ஔவையின் கூற்றுக்கு நிகழ்கால விளக்கமாகத் திகழும் இவர்  மிகக் குறுகிய காலத்திலேயே மரபுக் கவிதை படைக்கத் தொடங்கி சித்திரக் கவி எழுதுகிற அளவிற்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆம், ‘நாளும் ஒரு நல்வெண்பா’ என்ற குறிக்கோளோடு கவிதை படைக்கத் தொடங்கிய இவர்  சுமார் மூன்று ஆண்டுகாலப் பயிற்சியிலேயே இத்தகைய சாதனையைச் சாத்தியமாக்கி உள்ளார்.

இதனை, ‘நாளும் ஒரு நல்வெண்பா என்று தினமும் ஒரு வெண்பாவைத் தத்தித் தவறித் தவழ்ந்து எழுதிப் புலனத்தில் பதிவு செய்து கொண்டிருந்த என்னை எழுதக் கற்றுக் கொடுத்தும் ஊக்கப்படுத்தியும், படிப்பவர்கள் தவறுகளைத் திருத்தி எழுதத் தூண்டிய வேட்கையானது நூல் வெளியிடும் அளவிற்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. முதலில் எழுதுங்கள் என்று தூண்டிய குடந்தை இலக்கியப் பேரவை அன்பர்களுக்கும்……’ என்று அவர் தம் முதல் நூலில் ‘என்னுரை’யில் தந்துள்ள அகச்சான்றின் மூலமும், 15.1.2017 இல் தான் இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது என்ற புறச்சான்றின் மூலமும் உறுதிப் படுத்த முடிகிறது.

‘நாளும் ஒரு நல் வெண்பா – கதம்பமாலை என்ற முதல் தொகுதியை ஆகஸ்டு 2021 இல் வெளியிட்ட இவர், ‘நாளும் ஒரு நல் வெண்பா – சிந்தனைச் சிந்தியல் நாற்பொருள் ஆயிரம்’ என்ற இரண்டாம் தொகுதியை ஜனவரி 2022 இல் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்நூல் மூன்றாம் தொகுதியாக வெளிவருகிறது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளியில் மூன்று மரபுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பதிலிருந்தே இவரின் தீராத் தமிழ்த் தாகத்தையும் கவிதை மோகத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘முயற்சி திருவினையாகி’ இருக்கிறது. இது இன்றைய மாணவச் செல்வங்களுக்கும் – ஏன் தமிழாசிரியர்களுக்கும் கூட முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற செய்தியை குறிப்பால் உணர்த்துகிறது.

   

‘வண்ணந்தானே நாலைந்தென்ப’ என்ற தொல்காப்பியரின் சிந்தனைகளைச் சித்திரக்கவிக்கான வித்தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தண்டி ஆசிரியர் 12 வகை சித்திரக்கவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் உரையாசிரியர்கள் மேலும் 8 வகை சித்திரக் கவிதைகளைக் குறிப்பிடுகின்றனர்.

சித்திரக் கவிதைகளை ‘ஓவியக் கவிதைகள்’ என்று பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் குறிப்பிடுகிறார். பாடுபவர் தம் மொழிப் புலமையையும் மொழியின் செழுமையையும் பிறருக்கு வெளிப்படுத்தும் பாங்கில் சித்திரக் கவிதைகளைப் படைக்கின்றனர். தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளில் சித்திரக்கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மொழி வளத்தையும் கவிஞர்களின் புலமைத் திறத்தையும் காட்டக்கூடிய இத்தகைய கவிதை வடிவம் ஏறக்குறைய அழிந்த நிலைக்குப் போய்விட்டது என்ற மனக் காயத்திற்கு மருந்து போடும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இக் கவிதை வடிவத்தை அழியாமல் பாதுகாப்பதும் வளர்த்தெடுப்பதும் இன்றைய தலைமுறையினர் மனம் வைத்தால் சாத்தியமாகும். 

பாவலர் மோகன் அவர்கள் படைத்துள்ள இந்நூலின்கண் 30க்கும் மேற்பட்ட சித்திரக் கவிதைகளின் வகைப்பாடுகளுள் அடக்கத்தக்கவையாக 72 சித்திரக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏதுவாகப் படிக்கும் முறைமை மற்றும் பொருள் குறிப்புகளையும் நூலாசிரியர் வழங்கி உள்ளார். இது படிப்பவர்களின் தடுமாற்றத்தைத் தடுக்கும் என்று உறுதிபட நம்பலாம்.

நூலாசிரியருக்குக் கவிதை இயல்பாகவே வருவதை அவரது சொல்லாட்சித் திறனும் கவிதைப் பொருளும் கவிதை நடையும் தெற்றெனப் புலப்படுத்துகிறது. சொற்களைத் தேடி கவிஞர் அலைவதைக் கவிதையில் காணமுடியவில்லை. சொற்கள் அவரைத் தேடி வந்து கவிதையில் இடம் பிடித்து விடுகின்றன. இது இவரது கவிதைக்குக் கூடுதல் பலம். கலைமகளின் திருவருள் இவருக்குக் கைகூடப் பெற்றதனால் இது சாத்தியமாயிற்று என்றே நான் கருதுகிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதுப்புதுக் கவிதைகளைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். எனவே இவரைக் கார்மேகப் புலவர் என்பது போல இவரைக் ‘கவிமேகப் புலவர்’ என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று, அழிந்து வரும் சித்திரக் கவிதைகளுக்கு இவர் உயிர்ப்பு தந்துள்ளார். மற்றொன்று, தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியதாக இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவையைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தவன் நான். அப்பேரவைத் தொடங்கி வைக்கும் நல்வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற நான் அப்பேரவைப் பெற்றெடுத்து ஆளாக்கிய இக்கவிப் புதல்வனின் இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதிலும் பெருமை கொள்கிறேன். பாவலர் மோகன் அவர்கள் மேலும் பல அரிய கவி மாலைகளைப் புனைந்து அன்னைத் தமிழுக்கு அணிகலன்களாக சூட்ட வேண்டும்; தமிழ் கூரும் நல்லுலகு இவரைப் புரந்தருளி ஊக்கப்படுத்த வேண்டும் என்று மனங்குளிர பாராட்டுகிறேன்.

                                                                                         வளர் அன்புடன்,

கும்பகோணம்,

24.10.2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

கவிதைச் சிற்பி

 


கவிதைச் சிற்பி

 

‘சீரூடைச் சிற்பிகள்’ என்ற நூலாசிரியர் அன்பிற்கினிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் என் கல்விப் பயணத்தில் நான் சந்தித்த ஓர் அற்புத மனிதர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புப் பணியில் இவர் இருந்தபொழுது இக்கல்லூரியின் முதல்வராகிய என்னை ஆர்வமுடன் சந்தித்து உரையாடினார். உரையாடலின் ஊடே கல்லூரியின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த பற்றும் அன்றைய இவரது ஆசிரியர்கள் மீது இவர் காட்டிய பசுமை மாறா அன்பும் எனக்கு இவர் மீதான மதிப்பை மிகுதிப்படுத்தியது.

இவரது இயல்பான பேச்சு, அதிகாரத் தோரணையற்ற அணுகுமுறை, பெற்றோரை நினைந்து உருகும் பாங்கு, தன் பழைய வறிய வாழ்க்கையை மறைக்காமல் இயம்பியது, சமூகத்தின் மீதான அக்கறை, கடமையை மனித நேயத்தோடு செயற்படுத்துவது போன்ற அரிய குணங்களை இவரிடத்து காண முடிந்தது.

இத்தகைய எதிர்பாரா நட்பு பின்னர் ஆழ்நட்பாக மாறிப்போனது. கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் நெறிப்படுத்தவும் கல்லூரி மீதும் மாணவர்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவரான இவரைக் கல்லூரியில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். அன்றைய இவரது இயல்பான, உருக்கமான பேச்சு மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்ததை இங்கு நன்றியுடன்  நினைவு கூர்கிறேன். 1983 முதல் 1986 வரை இக்கல்லூரியில் புவியியல் துறையில் இளமறிவியல் பயின்ற இவர், தன் உயிரினும் மேலாக மதிக்கும் – தன் வாழ்க்கையில் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய – தான் பயின்ற கல்லூரியில் காவல்துறை உயர் அதிகாரியாக வந்து பணியாற்றியதைப் பெருமையாக நினைத்து புலகாங்கிதம் கொண்டார். அது மட்டுமின்றி கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தான் பங்கு கொண்டதை வாழ்க்கையின் பெரும்பேறாக எண்ணி எண்ணி மகிழ்ந்தார். இம்மனப்போக்கு அவரது நன்றியறிதலின் – எளிய குணத்தின் வெளிப்பாடாகவே எண்ண வேண்டியுள்ளது.

‘காவலும் குடும்பமும் இரு கண்களாகப் பாதுகாத்தேன்’ என்ற தன்னிலை விளக்கத்தை இக்கவிதை நூலில் கவிஞர் பதிவு செய்துள்ளார். இரட்டை  மாட்டு வண்டியான  பணியையும் குடும்பத்தையும் தடம் புரளாமல் செலுத்தியுள்ளார் என்பதற்கான சாட்சிய வரிகளாக இவை உள்ளன.

தான் பயின்ற இக்கல்லூரியை ‘ஆளாக்கிய அரசு ஆடவர் கல்லூரி’, ‘அறிவுச் செல்வத்தை அள்ளித்தந்த ஆடவர் காலேஜ்’ என்று ஆலாபனை செய்கிறார். இக்கவிதையில்,  ‘இனிமையான வாழ்க்கைக்கு அறிவூட்டிய போதகர்கள்’ என்று தனது ஆசிரியர்களை நினைவு கூர்கின்ற இவர், ‘திரும்பவும் இவர்களிடம் கல்வி கற்க முடியுமா?’ ஏன்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வரிகள் இக்கால மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை ஆகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றை ‘நாட்டைக் காக்கும் நான்கு சக்கரங்கள்’ என்று குறிப்பிடும் இவர் தன் வறிய பெற்றோர்களை அன்றும் இன்றும் என்றும் மதிக்கும் மதிநுட்பம் கொண்டவராக விளங்குவதை,

‘என் தாய் இருக்கும்போது காக்கி தந்தார்

இறந்த பிறகு கவிதை தந்தார்’

 

‘என் நேச தந்தையே

வாழ்வின் உன் வழியில்

வளர்வேன் உன் நினைவில்’

ஆகிய வரிகளில் கம்பீரமாய் காட்சிப்படுத்தி உள்ளார்.

எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம் – என்ற பாரதியின் சமூகப் பார்வையை

‘பிறக்கும் உயிரெல்லாம் உலகத்தில் ஒண்ணுதான்’ என்ற வரியின் மூலம்

சமத்துவ சமூகத்தைக் காணும் தன் வேட்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனக்கு உயிர் தந்த தாயை எண்ணிக் கவிதை படைத்த இவர் 

கவிதை உயிர் தந்த தாய் தமிழை

தேன்தமிழ், இன்தமிழ், முத்தமிழ், இன்பத்தமிழ், நற்றமிழ், இலக்கியத் தமிழ், இலக்கணத் தமிழ், கன்னித் தமிழ், இயற்கைத் தமிழ், செந்தமிழ், இசைத்தமிழ், சங்கத்தமிழ் என்றெல்லாம் மனங்குளிர விளித்து மகிழ்கிறார்.

இவர், சீருடை சிற்பிக்குள் முகிழ்த்த ஒரு கவிதைச் சிற்பி. இவர் தம் கவிதையில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு கரைபுரண்டோடுகிறது. கவிதையில் இனிமை, எளிமை, நேர்மை, உண்மை கொடிகட்டி பறக்கிறது. கவிதை நெடுக மனிதாபிமானம் இழையோடுகிறது. இதற்குக் கட்டியங்கூறும் வகையில் இவரது பணி அனுபவப் பகிர்வு கவிதைகள் அமைந்துள்ளன.

இவருக்குக் கவிதை நடை மிக இயல்பாய் வாய்த்திருக்கிறது. எந்த இடத்திலும் முயற்சித்தும் வலிந்தும் சொல்லாடல்களைக் கையாளவில்லை என்பதால் இவரை இயல்புக் கவிஞர் என்றே அழைக்கலாம். காவல்துறையின் கடும் பணியிலும் கடுமை காட்டாத இவருக்கு வாய்த்துள்ள இளகிய மனமும் நேரிய பார்வையும் பாராட்டுதற்குரியது. கவிஞர் மேலும் பல நூல்களைத் தமிழ் உலகிற்கு உவந்தளித்திட மனமுவந்து வாழ்த்துகிறேன்.

கும்பகோணம்,                                                                              வளர் அன்புடன்,

10-06-2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் ஆசிரியர் தின விழா



 

திங்கள், 5 அக்டோபர், 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வாழ்த்து

 பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் மன்னர் சரபோஜி கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் ஆர்.கோவிந்தராஜ் அவர்கள் 5.10.2020 திங்கள்கிழமை பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தபொழுது எடுத்த படம். அருகில் த.நா. அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் க.இரமேஷ் மற்றும் கிளைப்பொறுப்பாளர்கள் முனைவர் த.சுவாமிநாதன், இரா. முருகன், இரெ.மணியோசை ஆகியோர்.


ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முதல்வர் பணி விடுவிப்பு (22.09.2020)

 மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பணியிலிருந்து 22.09.2020 மாலை 5. 00 மணியளவில் நடைபெற்ற விடையாற்று விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள்






முதல்வர் பொறுப்பேற்பு (23.09.2020)

 கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் முதல்வராக 23.09.2020 முற்பகல் 10. 00 மணியளவில் பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்





வெள்ளி, 8 மே, 2020

படித்ததில் பிடித்தது - 6

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்றாவது முறையாக ஊரடங்கு 04-05-2020 முதல் 17-05-2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை மறு வாசிப்பு செய்து வருகிறேன். இதற்கு முன்பு  2000 ஆண்டு வாக்கில் அதைப் படித்துள்ளேன். அதில் சில செய்திகளைத் தொடர்ந்து இதில் பதிவிட உள்ளேன்.

வலம் வருதல் (பக்கம் 74) 

  • ஊர் வலம் வருதல், மணவறையை வலப்புறமாக சுற்றி வருதல், மணப்பெண் முதன் முதல் வீட்டுக்குள் வலது காலை வைத்து நுழைதல் போன்றவை. 

பூமியே வலப்பக்கமாகத்தான் சுற்றுகிறது. எனவே வலம் வருதல், வலது காலை எடுத்து வைத்து வருதல் என்பவை அறிவியல் பூர்வமான  ஒன்று.
மேலும் மனிதர்களின் இடப்பக்க கை, கால்களின் வலிமையைவிட வலப்பக்க கை, கால்களே வலிமை உடையவை.
வலம் என்றால் நாம் வலிமை அடைவோம் என்பது பொருள்.
வலியோம், வல்லோம், வல்லம், வலம் - இவை ஓரே பொருள் உடையன.

வருகிறேன் - போகிறேன்  (பக்கம் 74) 

  • திருமணம் முதலிய மங்கல நிகழ்வுகளுக்குச் சென்றால் போய் வருகிறேன் என்பது - இது போன்ற அடுத்தடுத்த நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும், நான் அதில் கலந்து கொள்வேன் என்பதன் அடையாளம்.
  • துக்க நிகழ்வுகளுக்குச் சென்றால் நான் போகிறேன் என்பது - இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்பதன் அடையாளம்.
புதைத்தலும் எரித்தலும்:  (பக்கம் 76) 
  • திருமணம் ஆகாமல் இறப்போரை (குழந்தைகள், வாலிபப் பருவத்தினர் ) புதைப்பர். வாழாத உடம்பு மண்ணில் புதைந்து சாந்தி அடையட்டும். 
  • வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகட்டும்.
  • எரித்தவர்களின் சாம்பலை நதியில் கரைப்பது - ஆத்மா ஆறு போல் ஓடி கடல் போன்ற இறைவனோடு கலக்கட்டும்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்: (பக்கம் 81) 
  • உன் கணவன் கல் மனது உடையவனாக இருந்தாலும் சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக (புன்மையாக) வெறும் புல்லைப் போன்று இருந்தாலும் அவனைக் கணவனாகக் கருத வேண்டும்.

அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்  (பக்கம் 79) 

  • எல்லாக் குடும்பங்களிலும் அம்மி முக்கியமானது. என் கால் உன் மீதுதான் இருக்கும். உன்னைத் தாண்டிப் (படிதாண்டி) போகாது. படிதாண்டா பத்தினி.
  • அருந்ததியைப் போன்று கற்பு மாறாத நட்சத்திரமாக மின்னுவேன்.
  • அக்னி சாட்சி - கற்பில் அக்னி போன்றவள்
காப்பு அணிதல்  (பக்கம் 80) 
  • பெண்ணிற்குக் காப்பு வேண்டும். தற்காப்பு - தாய் தந்தை காப்பு - தெய்வத்தின் காப்பு. பெண்ணைக் காப்பேன் என்பதன் அடையாளமாகத்தான் கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது.
மூன்று முடிச்சு (பக்கம் 80)
  • ஒரு முடிச்சு -  கணவனுக்குக் கட்டுப்பட்டவள்
  • இரண்டவாது முடிச்சு - பெற்றோருக்கு அடங்கியவள்
  • மூன்றாவது முடிச்சு - தெய்வத்திற்குப் பயந்தவள்
பாலும் பழமும் (பக்கம் 80)
  • பாலோடு சேர்ந்த பழம் போல மண வாழ்க்கை சுவை பெறட்டும்
  • பூமணம் போல மண வாழ்க்கை
காலைப் பார்த்து நட (பக்கம் 79) 
  • திருமணம் ஆனவன் - நிமிர்ந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் பெண் கழுத்தில் மங்கல நாண் அணிந்திருந்தால் அவள் அந்நியன் மனைவி என்று ஒதுங்கிட வேண்டும்.
  • திருமணம் ஆனவள் தலை குனிந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் ஆடவன் காலில் மெட்டி இருந்தால் மணமானவன் என்று அவள் ஒதுங்கிட வேண்டும். (பழங்காலத்தில் திருமணம் ஆன ஆண் காலில் மெட்டி அணிதல் வழக்கம்)
மூவகை நண்பர்கள் (பக்கம் 92-93)
  • பனைமரம்: மனிதர்களின் உதவியின்றி தானே வளர்ந்து மனிதர்களுக்குப் பயனளிக்கக் கூடியது. அதுபோல் பயன் கருதாமல் நட்பு கொள்பவர்கள்
  • தென்னை மரம்: அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு அவ்வப்போது பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
  • வாழை மரம்; நாள் தோறும் தண்ணீர்  ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு நாள்தோறும் பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
பெற்றோர்  (பக்கம் 114) 
  • தந்தையிடமிருந்து வித்தைப் பெற்று தாய் குழந்தை பாக்கியம் பெறுகிறாள். தந்தைக்கு அந்த வித்தைக் கடவுள் தருகிறார்.  எனவே தந்தை கடவுளிடமிருந்தும் தாய் கணவனிடமிருந்தும் பெறுவதால் அவர்கள் பெற்றோர்.






செவ்வாய், 5 மே, 2020

படித்ததில் பிடித்தது - 5

மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு என்ற இந்நூல் கே. அசோகன் அவர்களை ஆசிரியராகவும் சமஸ் அவர்களைத் தொகுப்பாசிரியராகவும் கொண்டு 'தமிழ் திசை' வெளியீடாக வெளிவந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய தொகுப்பு நூலாக 800 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதில் அண்ணாவைப் பற்றிய அரிய செய்திகள், அவரது முக்கியமான பேட்டிகள், பெரியார் முதலான அரசியல் பெருந்தலைவர்களின் அண்ணாவைப் பற்றிய  கருத்துகள், அண்ணா இறந்தபொழுது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை, அண்ணாவின் பேச்சாற்றல், படைப்பாற்றல் முதலான ஆளுமைப் பண்புகள், இளைஞர்களைக் கவர்ந்திழுத்து வைத்திருக்கும் மனிதநேயம், எளிமை, இனிமை, இன்னும் பலவாறான செய்திகளைத் தக்க சான்றுகளோடு இந்நூல் பதிவு செய்துள்ளது. அண்ணாவின் அரிய புகைப்படங்கள் சிலவும்  இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். திராவிட இயக்கப் பெருந்தலைவர்கள் மட்டுமின்றி தமிழராகப் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய அரிய வரலாற்றுக் கருத்துக் களஞ்சியம் இந்நூல்.

அண்ணாவைப் பற்றி இந்நூலில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சில செய்திகள்:
  • குள்ளமான உருவம், மலர்ந்த முகம், முள் தாடி, விரைந்த நடை, கசங்கிய உடை, எளிமை - இதுவே அண்ணா.
  • நான்கு முழ வேட்டி. அதையும் நான்கு நாட்கள் உடுத்துவார் அண்ணா. முதல் நேராக, அடுத்த நாள் தலைகீழாக, மூன்றாவது நாள் வெளிப்பக்கத்தை உள்பக்கமாக, நான்காம் அதையும் தலைகீழாக மாற்றிக் கட்டுவார்.
  • இளம் வயதில் ஆன்மீக நாட்டம் கொண்டவர். திருத்தணியில் தான் இவருக்கு மொட்டை போட்டுப் பெயரிடப்பட்டது.
  • இறக்கும் போது குடும்பத்திற்குக் கடன் இருந்தது. பிந்தைய நாட்களில் கட்சித் தொண்டர்களின் நிதி உதவியுடன் கடன் அடைக்கப்பட்டது.
  • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். மூன்றாவது முறைதான் தேர்ச்சிப் பெற்றார்.
  • பள்ளிப் பருவத்திலேயே மூக்குப்பொடி போடும் பழக்கம் கொண்டவர்.
  • தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது அண்ணாவின் பேச்சாற்றல்தான். ஆனால் பள்ளிப் பருவத்தில் இவர் ஒரு பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றதில்லை. பி.ஏ. ஹானர்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது முதன்முதலாக ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். 
  • மாணவர்களிடம் பேசும்போது பெரிதும் ஆங்கிலத்திலேயே உரையாடுவார். அதைப்போலவே  நன்கு படித்த தனது கட்சிக்காரர்களிடமும் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புவார். காரணம் அவர்களும் ஆங்கிலப் புலமை பெற வேண்டும் என்பதற்காக. 
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்த காங்கிரசாருடன் இணைந்து பிரச்சாரம் செய்யவும் தயார் என்று அறிவித்தார்.
  • சாராயக் காசில்தான் நான் ஆட்சியில் தொடர வேண்டும் என்றால் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுவேன் என்று துணிச்சலாக அறிவித்தவர்.
  • அண்ணாவின் முதல் கட்டுரை மகளிர் கோட்டம். தமிழரசு இதழில் வெளியானது. அப்போது அவரது வயது 22.
  • முதல் சிறுகதை கொக்கரக்கோ. ஆனந்த விகடனில் வெளியானது. அப்போது அவரது வயது 25.
  • நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் என்ற இவர் 30 வயதில் நீதிக்கட்சி பொதுச்செயலாளர், 35 வயதில் தி.க. பொதுச்செயலாளர், 40 வயதில் தி.மு.க. பொதுச்செயலாளர்..
  • தி.க. விலிருந்து பிரிந்து தி.மு.க. வை 17.09.1949  இல் அண்ணா ஆரம்பித்தார்.
  • பெரியாருக்கும் அண்ணாவிற்கும் பல கருத்து முரண்பாடுகள் இருந்தன. பெரியார் மேடைகளில் அண்ணாவை விமர்சித்துப் பேசுவார். ஆனால், ஒரு போதும் அண்ணா பெரியாரை விமர்சித்துப் பேசியது கிடையாது. 
  • ஓர் இரவு நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டது.
  • தம்பிக்கு எழுதிய பல கடிதங்கள் 'தம்பி, சேவல் கூவுகிறது, நான் உறங்கச் செல்கிறேன்' என்று முடியும். இரவு முழுவதும் எழுதுவதையும் படிப்பதையும் பழக்கமாக்கிக் கொண்டமையால் காலையில் வெகுநேரம் கழித்தே  துயிலெழுவார்.
  • மாற்றாரின் கருத்தையும் மதிப்பவர், 'மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணமுண்டு' என்று முழங்கியவர்.
  •  தம்மை இகழ்பவரைக் கூட இழிவாகப் பேசாதவர். 
  • இவர் பேசும் மேடைக்கு அருகில் இவரைப் பற்றி அருவருக்கத் தக்க வகையில் எழுதி இருந்த இடத்தில் அரிக்கேன் விளக்கு வைக்க சொன்னவர்.  எழுதியவர்களின் தரம் இரவிலும் தெரியட்டும் என்றார். 
  • இழிவாக எழுதுவோரின் கட்டை விரலை வெட்டுவோம் என்று பேசிய காமராஜரை 'குணாளா, குணக்கொழுந்தே' என்று புகழ்ந்ததோடு ;கோடு உயர்ந்த்து குன்றம் தாழ்ந்த்து என்று கட்டுரை எழுதினார்.
  • 1962 தேர்தலில் போட்டியிட்ட அண்ணாவைத் தோற்கடிக்க காமராஜர் அமைச்சர்கள் பட்டாளத்தையே காஞ்சியில் இறக்கினார். மாறாக காமராஜர் போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் தீவிர பிரசாரம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
  • சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது நள்ளிரவாயிற்று. மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவிக் கொண்டிருப்பதோ நித்திரை, மறக்காமல் இடுவீர் எமக்கு முத்திரை என்று நான்கு வரியில் கூட்டத்தை முடித்தவர்.
  • படேல் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகம் வந்தபொழுது 'படேல் வருகிறார் பணப் பை பத்திரம்' என்றார்,
  • சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக முண்டாசு கட்டிக் கொண்டு திரையரங்குகளுக்கே சென்று சினிமா பார்ப்பார். 
  • ஓவியத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அதனால்தான் கட்சி மாநாடுகளில் எல்லாம் தவறாமல் ஓவியக் கண்காட்சி நடத்த சொன்னார்.
  • சீட்டாட்டத்தில் நாட்டம் கொண்டவரான அண்ணா முதலமைச்சரான பிறகு அப்பழக்கத்தைக் கைவிட்டார்.
  • திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளவு கடந்த பற்றுக் கொண்டவர்.
  • அண்ணாவால் புகழ் பெற்ற சிறு வாசகங்கள்: 
    • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
    • கடமை கண்ணியம் கட்டுப்பாடு
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
    • கத்தியைத் தீட்டாதே, உன் புத்தியைத் தீட்டு
    • ஏடா தம்பீ, எடடா பேனா
    • எங்கிருந்தாலும் வாழ்க
    • மறப்போம் மன்னிப்போம் 
    • வாழ்க வசவாளர்கள்
    • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு 
    • சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் வெளிச்சம் 
    • மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 
    • இவ்வுலகில்  59 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்களே வாழ்ந்தார்  (15.09.1909- 03.02.1969)
  • 06.03.1967 இல் தமிழகத்தின் ஆறாவது முதல்வர்
  • தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்
  • சத்யமே ஜெயம் என்பதை வாய்மையே வெல்லும் என்று மாற்றினார்.
(இந்த நூலை முழுமையாகப் படிக்கவில்லை என்றாலும் பருந்துப் பார்வையாகப் படித்துள்ளேன்.)